Dec 3, 2025 - 03:18 PM -
0
அனர்த்த நிலையின் கீழ் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் நீரின் தரம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 21 மாவட்டங்களில் 13 மாவட்டங்களின் நீர் வழங்கல் நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள 343 நீர் பம்பி நிலையங்களில் 156 நிலையங்களுக்கு பகுதிளவு அல்லது முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தன பண்டார குறிப்பிட்டார்.
இன்று (03) அளவில் பாதிக்கப்பட்ட 159 நீர் வழங்கல் திட்டங்களில் 139 திட்டங்கள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிய அவர், மேலும் 8 மாவட்டங்களில் 17 நீர் வழங்கல் திட்டங்களை சீர்செய்ய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த நீர் திட்டங்களை சென்றடைய முடியாதவாறு வீதிகள் தடைப்பட்டுள்ள மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ள இடங்களில் நீர் விநியோகத்தை வழங்குவது தொடர்ந்தும் கடினமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நீர் வழங்கல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

