Dec 3, 2025 - 07:46 PM -
0
அம்பலங்கொட, மோதர தேவாலயக் குழு தலைவரை கொலை செய்த துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தற்போது பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'லொகு பெட்டி' எனும் குற்றவாளியின் தரப்பிலிருந்தே தமக்கு இந்த கொலைக்கான ஒப்பந்தம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தான் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஊடாகவே லொகு பெட்டியை அறிமுகம் செய்து கொண்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 'மஹதுர இசுர' என்பவர் கொலைச் சம்பவத்தை மேற்கொண்ட தினத்தில், தான் அளுத்கம, தர்கா நகரில் வைத்து அவர் வருகை தந்த காரில் தம்மை ஏற்றிக்கொண்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொலைக்காக 190,000 ரூபா பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு கிடைத்த பணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாகக் கூறியுள்ளதுடன், அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த அவரை கைது செய்யும் போது அவரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய சந்தேகநபரை அளுத்கம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேராவால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

