Dec 3, 2025 - 10:28 PM -
0
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்று (02) வரை 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நமது நாட்டு மக்களில் பெரும்பாலோர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தலையிடுவது போன்று,வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக, நிதி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்பில் தற்போது இரண்டு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதன் முதலாவது வேலைத்திட்டமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் நிதி உதவிக்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்புக் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 19,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் அதில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.
மேலும், இரண்டாவது வேலைத்திட்டத்தின் கீழ், இந்நாட்டிற்கு பொருட்களை அனுப்புபவர்களுக்கு குறைந்த ஆவணங்கள் மற்றும் எந்த கட்டணமும் இன்றி பொருட்களை அனுப்பும் செயல்முறை இலகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை வரி மற்றும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சுங்க பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு செயலணி நிறுவப்பட்டுள்ளது.
எனவே, இந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்களை எளிதாக விடுவிக்க முடியும் என்பதைக் கூற வேண்டும். இருப்பினும், இந்த சலுகை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பெயரில் அனுப்பப்படும் பொருட்களுக்கு மாத்திரமே கிடைக்கும்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏற்கனவே சுங்க இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் மூலம் இது குறித்து தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பெறப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மூலம் உடனடியாக விநியோகிக்கும் வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிகள் மூலம் பணம் அனுப்புவதில் சிரமம் இருந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகங்கள் மூலமாகவும் நாட்டிற்கு பணத்தை அனுப்பலாம்.
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களாகிய உங்களால் அனுப்பும் பணம் மற்றும் பொருட்கள் உங்கள் சகோதரர் அல்லது அண்டை வீட்டாருக்கு வழங்கப்படலாம். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அனைவரின் ஆதரவும் அவசியம் என்றார்.

