Dec 5, 2025 - 08:37 AM -
0
இலங்கையில் வங்கி அல்லாத, முன்னணி முதன்மை வணிகர் நிறுவனங்களில் ஒன்றான WealthTrust Securities Limited (WTS), இவ்வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான அறிமுகம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான அமர்வு நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, தனது ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றமை தொடர்பில் அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள், முதலீட்டுத் துறை ஆய்வாளர்கள், மற்றும் சந்தையில் பங்கேற்பவர்கள் என பல தரப்பினரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்த இந்நிகழ்வு, இடம்பெறவிருக்கும் WTS ன் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் மற்றும் மூலதனத்தை அதிகரிப்பதற்கு உதவும் மூலோபாயரீதியான காரண விளக்கம் குறித்த ஆழமான கண்ணோட்டத்தை வழங்கியிருந்தது.
இப்பங்கு வழங்கல் நடவடிக்கை மூலமாக ரூபா 500,837,708 தொகையை திரட்டும் நோக்குடன், பங்கொன்று ரூபா 7.00 என்ற விலைப்பெறுமதியில் 71,548,244 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை WTS வழங்குகின்றது. எதிர்பாராத வட்டி வீத ஏற்றத்தாழ்வுக்கு எதிரான நெகிழ்திறனை மேம்படுத்தி, முதன்மை வணிகர்களின் செயல்பாடுகளுடன் தொடர்புபட்ட சந்தை இடர்களை நிர்வகிக்கும் ஆற்றலை அதிகரித்து, WTS ன் பிரதான மூலதனக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் எவ்வாறு இந்த ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த அமர்வின் போது நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
சாதகமான சூழ்நிலைகள் எழுகின்ற நிலையில், அரசாங்க கடன் பத்திரங்கள் கொண்ட தனது வர்த்தக வரிசையை விரிவுபடுத்தும் அடிப்படை நோக்கத்துடன், வழக்கமான வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காகவே இம்மூலதனம் திரட்டப்படுவதை நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச பிரதான மூலதன தேவைப்பாடுகளுக்கு அமைவாக 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான தனது மூலதன மட்டத்தை ஏற்கனவே கொண்டுள்ளதாக WTS உறுதிப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் விவேகமான இடர் முகாமைத்துவத்தின் முக்கியமான குறிகாட்டியாக, Lanka Rating Agency இடமிருந்து A- (Positive outlook) என்ற கடன் தர மதிப்பீட்டை WTS மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. WTS ன் மிதமான வர்த்தக அணுகுமுறையானது சந்தையில் ஏற்றத்தாழ்வு நிலவிய காலகட்டங்களில் கூட நட்டங்களை குறைந்தபட்சமாக்கியுள்ளதுடன், கடந்த 12 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் ஒரேயொரு ஆண்டில் மாத்திரமே சிறிதளவு நட்டம் பதிவாக்கப்பட்டுள்ளதை பேச்சாளர்கள் வலியுறுத்தினர். கூட்டாக 100 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள அதன் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட முகாமைத்துவ அணி நிறுவனத்தின் ஒழுக்கமான செயல்திறனை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான பலமாகக் காணப்படுகின்றமையும் எடுத்துக்கூறப்பட்டது.
ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையின் கீழ் பங்குகளை வழங்கும் நடவடிக்கை 2025 டிசம்பர் 17 அன்று ஆரம்பிக்கவுள்ளதுடன், நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது. இது பூர்த்தி செய்யப்பட்டவுடன், நிரற்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக, கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி சபையில் இப்பங்குகளை நிரற்படுத்துவதற்கு WTS திட்டமிட்டுள்ளது.
www.wealthtrust.lk என்ற நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாகவோ, அல்லது www.cse.lk என்ற கொழும்பு பங்குச் சந்தையின் இணையத்தளத்தினூடாகவோ இது குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு மற்றும் விண்ணப்ப படிவங்களை ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

