செய்திகள்
இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவோமா?

Dec 5, 2025 - 12:35 PM -

0

இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவோமா?

22 மாவட்டங்களில் நிலவிய சீரற்ற வானிலை நிலைமை தற்போது படிப்படியாக குறைவடைந்துள்ள போதிலும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது மக்களுக்கு இன்னும் கடினமாகவே உள்ளது. 

மண்ணுக்கு அடியில் கிராமங்களே புதையுண்டிருக்கும் நிலையில், சில வீடுகளைக் கண்டுபிடிப்பது கூட கடினமாகியுள்ளது. 

எவ்வாறாயினும், மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைப் போன்றே, கொழும்பு மாவட்டத்தை பாதித்த கடும் வெள்ளம் காரணமாகவும் மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் 7 அடிக்கும் அதிகமான வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், இன்று (05) காலை வரையில் சில இடங்களில் ஒரு அடி அளவிலேயே நீர் இருந்ததாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். 

அப்பகுதி மக்கள் அயலவர்களுக்கு கூட உதவ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், தமது வீடுகளை துப்புரவு செய்துகொள்ள முடியுமான வகையில் உதவுமாறு அவர்கள் அனைவரிடமும் கோருகின்றனர். 

வெல்லம்பிட்டி, வெலேவத்த பிரதேச மக்களின் வீடுகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன், அம்மக்கள் தமது வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்திடமும் உதவி கோருகின்றனர். 

இத்தருணத்தில் எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் மற்றுமொருவருக்காக அர்ப்பணித்து, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உழைப்புப் பங்களிப்பை (சிரமதானம்) வழங்க முடியுமானால், அது உண்மையாகவே மனிதநேயத்தை போற்றும் ஒரு செயலாகும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம். 

இதற்கிடையில், சோமாவதிய புனித பூமியை அண்டிய பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் வெள்ளத்தில் சிக்கி அழிவடைந்துள்ளன. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் கிடைத்த போதிலும், வீடுகளை துப்புரவு செய்தல் மற்றும் வீடுகளை புனரமைத்துக்கொள்வதே தற்போது அவர்களுக்கு உள்ள பாரிய பிரச்சினையாகும். 

இன்று காலை 6 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், சீரற்ற வானிலை காரணமாக 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களின் 2,303 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதுடன், மேலும் 52,489 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05