Dec 5, 2025 - 07:33 PM -
0
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.
அத்துடன், இருவர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர்.
அதற்கமைய, 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது.
அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 14 ஆம் திகதி 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (05) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 14 நாட்கள் இடம்பெற்றன.
2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் 17 நாட்கள் இடம்பெறவிருந்ததுடன், சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விவாத நாட்கள் இவ்வாறு 14 நாட்களாகக் குறைக்கப்பட்டன.
அந்த நிலையில், கடந்த சில நாட்களில் குழுநிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு சில அமைச்சுக்களுக்கான செலவுத்தலைப்புகள் மீது முன்னர் திட்டமிடப்பட்ட தினங்களில் விவாதம் மேற்கொள்ள முடியாமல் போனதால், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மேலதிகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புகளும் 2025.12.03 ஆம் திகதியும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பாராளுமன்றத்தில் இன்று (05) நிறைவேற்றப்பட்ட 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
அதற்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பவற்றுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மூன்று குறைநிரப்புத் தொகைகளும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.

