Dec 5, 2025 - 09:08 PM -
0
டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே - மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பை சீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) அன்றோ அல்லது அதற்குள்ளாகவோ நிறைவு செய்யப்பட்டு, அப்பகுதிகளுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
டித்வா புயலின் தாக்கம் காரணமாக ரன்தெம்பே - மஹியங்கனை 132 கிலோ வோல்ட் மின் பரிமாற்ற அமைப்பின் ஒரு மின்கோபுரம் முழுமையாக அழிவடைந்ததுடன், மின் கம்பிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டது.
இந்தச் சேதத்தினால் மஹியங்கனைப் பகுதிக்கும், அத்துடன் நாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது.
இதன்போது இலங்கை மின்சார சபை (CEB) உடனடியாகச் செயற்பட்டு, 33 கிலோ வோல்ட் (kV) தற்காலிக இணைப்பு மூலம் அப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தது.
மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு சில மணி நேரங்கள் விட்டு விட்டு மின்சாரம் வழங்கும் முறையையும் CEB நடைமுறைப்படுத்தியது.
எவ்வாறாயினும், இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின்போது, மின் பரிமாற்றக் கோபுரம் முழுமையாக அழிந்து சேதமடைந்த போவதென்ன நீர்மின் நிலையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

