Dec 5, 2025 - 11:46 PM -
0
எதிர்வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரித்தால், மொரகஹகந்த நீர்த்தேக்கம் அதன் உச்ச நீர்மட்டத்தை அடையும் என்று இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
உச்ச நீர்மட்டத்தை எட்டும்போது நீர்த்தேக்கத்திற்கு நீர் வரும் வேகத்தைப் பொறுத்து, வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வான் கதவுகள் திறக்கப்படும்போது நீர் அம்பன் கங்கையில் திறந்துவிடப்படும்.
இதன் விளைவாக அம்பன் கங்கை மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரும் என மகாவலி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் காரணங்களால், அம்பன் கங்கை மற்றும் மகாவலி கங்கையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் நீர் மட்டங்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் சதவீதம் தற்போது 98.87% ஆக உள்ளது. வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரித்தால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் உச்ச மதிப்பை அடையும். மகாவலி அதிகார சபை இது தொடர்பாக பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.
வான் கதவுகளைத் திறக்க நேரிட்டால், அது குறித்து எல்லெஹெர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து மக்களுக்கும் விளம்பர நடவடிக்கைகளின் மூலம் அறிவிக்க, மொரகஹகந்த பொறுப்பு பொறியியலாளர் தனது முகாமைத்துவப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

