Dec 8, 2025 - 11:56 AM -
0
கொச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு நடிகை காரில் சென்ற போது, ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் அந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மலையாள பிரபல நடிகர் திலீப்-க்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த 10.7.2017 அன்று நடிகர் திலீப்பை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் அங்கமாலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்பட 8 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை 8.10.2018 அன்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றில் தொடங்கியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி நடிகர் திலீப் கடந்த 2018-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் 4½ ஆண்டு விசாரணை நடந்தது.
நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று வழங்கியது. தீர்ப்பில்,
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை. திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
6 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் விடுவித்து உத்தரவிட்டது. A1 - A6 என 6 பேர் குற்றவாளிகள் என உத்தரவிட்டது.

