Dec 10, 2025 - 11:45 AM -
0
டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் ஓர் அங்கமான, D P Logistics (Private) Limited (DPL) நிறுவனம், Ceylon Tea Brokers PLC நிறுவனத்திடம் இருந்து Logicare (Pvt) Ltd நிறுவனத்தை ரூ. 1.3 பில்லியன் வணிக மதிப்பிற்கு கையகப்படுத்துவதை அறிவித்துள்ளது. பங்குகளின் விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கையில் இரு நிறுவனங்களும் கைச்சாத்திட்டுள்ளன. இந்த பரிவர்த்தனையில் கொள்முதல் பரிசீலனையாக சிலோன் டீ புரோக்கர்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு ரூ. 635.3 மில்லியன் செலுத்துதல், எஞ்சிய முதலீட்டிற்கு ஈடாகும் வகையில், வங்கி மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் கடன்களை ஏற்றுக்கொள்ளல் ஆகியன உள்ளடங்குகின்றன.
2025 ஒக்டோபர் 30ஆம் திகதி செயற்படுத்தப்பட்ட, ‘பங்குகளின் விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கை’ Logicare (Private) Limited நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பங்குகளின் 100% இனை கையகப்படுத்தலை உள்ளடக்குகின்றது. குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் கையகப்படுத்தும் செயன்முறை நிறைவடையும்.
DPL நிறுவனமானது தற்போது களஞ்சியப்படுத்தல் (warehousing) மற்றும் 3PL (3ஆம் தரப்பு லொஜிஸ்டிக்ஸ்) செயற்பாடுகளில், முதல் பத்து நிறுவனங்களுக்குள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. அத்துடன், நாட்டில் உள்ள லொஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் மிகப்பெரிய கொள்கலன் வாகனத் தொகுதிகளில் ஒன்றையும் கொண்டுள்ளது. DPL நிறுவனம், மிகச் சிறிது சிறிதான சரக்கு அனுப்புதல் (freight forwarding) சந்தையில் செயற்பட்ட போதிலும், தற்போது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் பங்குகளைப் கையகப்படுத்தி வருகிறது. இது அனைத்து லொஜிஸ்டிக்ஸ் துறைகளிலும் நிபுணத்துவம் கொண்ட மிகச் சில உள்ளூர் நிறுவனங்களில் ஒன்றாக அதன் நற்பெயரை வலுப்படுத்துகிறது.
டேவிட் பீரிஸ் குழுமம், கப்பல் முகவர், கப்பல் பராமரிப்பு சேவைகள் மற்றும் கடல்சார் லொஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் அதன் லொஜிஸ்டிக்ஸ் மற்றும் ஷிப்பிங் குழுமத்தை விரிவுபடுத்தும் வகையில் 2022 இல் Expolanka Holdings PLC நிறுவனத்தின் ஷிப்பிங் பிரிவான Pulsar Shipping Agencies (Pvt.) Limited நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
இந்தக் கையகப்படுத்தலானது, கொள்கலன், விநியோகம் மற்றும் திட்டமிடல் சார்ந்த போக்குவரத்து, சரக்கு அனுப்புதல், சுங்க அனுமதி, 3ஆம் தரப்பு லொஜிஸ்டிக்ஸ்/ களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய செயற்பாடுகளுடன், ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான (end-to-end) லொஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக DPL நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்துகிறது. Logicare நிறுவனத்தின் நவீன லொஜிஸ்டிக்ஸ் மற்றும் களஞ்சியப்படுத்தல் திறன்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், ஒருங்கிணைந்த லொஜிஸ்டிக்ஸ் தீர்வுகளுக்கான நாட்டின் அதிகரித்து வரும் தேவைக்கு இணங்க, அதன் திறனை விரிவுபடுத்தி, அதன் சேவை வகைகளை மேலும் மேம்படுத்துவதை D P Logistics நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2017 இல் Ceylon Tea Brokers நிறுவனத்தால் நிறுவப்பட்ட Logicare நிறுவனம், அதிநவீன களஞ்சியப்படுத்தல் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது. பிரதான தேயிலை புரோக்கிங் (tea broking) மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகளில் கவனம் செலுத்துகின்ற தமது மூலோபாய நடவடிக்கையின் ஒரு அங்கமாக, இந்த விற்பனையானது சிலோன் டீ புரோக்கர்ஸ் அதன் லொஜிஸ்டிக்ஸ் தொடர்பான துணை நிறுவனத்திலிருந்து முழுமையாக விலகுவதை காட்டுகிறது.
இந்த கையகப்படுத்தலானது, அதிக வளர்ச்சி கொண்ட துறைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கும், தமது பல்வகைப்பட்ட வணிகங்கள் முழுவதும் ஒன்றுடன் ஒன்றான ஒத்திசைவு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்குமான டேவிட் பீரிஸ் குழுமத்தின் அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலான வணிக விசேடத்துவத்துடன், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பல்வகைப்படுத்தப்பட்ட, நிதி ரீதியாக உறுதியான கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக டேவிட் பீரிஸ் குழுமம் திகழ்கிறது. இது வாகனத் துறை, நிதிச் சேவைகள், லொஜிஸ்டிக்ஸ், ஷிப்பிங் மற்றும் கடல்சார் சேவைகள், மோட்டார் வாகன பந்தயம் மற்றும் பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி போன்ற துறைகளில் 30 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை கொண்டுள்ளது.

