Dec 10, 2025 - 04:26 PM -
0
உக்ரைன் தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் போரைப் பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் வழங்கும் வகையில், கருத்து வௌியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி தாம் தேர்தல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஷெலென்ஸ்கியின் ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் கடந்த வருடத்தின் மே மாதத்துடன் முடிவடைய இருந்தது.
ஆனால், ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் உக்ரைனில் தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
'பொலிட்டிகோ' ஊடகத்திற்கு ட்ரம்ப் அளித்த விரிவான பேட்டியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷெலென்ஸ்கி, சட்டத்தை மாற்றக்கூடிய வகையிலான முன்மொழிவுகளைத் தயாரிக்குமாறு தான் கேட்கப்போவதாகக் கூறினார்.
அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன் வாக்குப்பதிவிற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், அடுத்த 60 முதல் 90 நாட்களில் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அமெரிக்கா எமக்கு உதவ வேண்டும் என்று நான் இப்போது கேட்கிறேன்.
இதை நான் வெளிப்படையாகவும் கூறுகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
உக்ரைனில் தேர்தல் விவகாரம் என்பது முதன்மையாக எங்கள் மக்களைச் சார்ந்தது என்று நான் நம்புகிறேன். இது உக்ரைன் மக்களுக்கான கேள்வியே தவிர, பிற நாட்டு மக்களுக்கானது அல்ல. எங்கள் பங்காளர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள போதிலும் இதைச் சொல்கிறேன் என்றார்.
நாங்கள் அதிகாரத்தைத் தக்கவைக்க முயல்கிறோம் அல்லது நான் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி பதவியை விடாமல் இருக்கிறேன் என்றும், அதனால்தான் போர் முடிவுக்கு வரவில்லை என்றும் சூசகமாகப் பேசப்படுவதைக் கேட்டேன். இது வெளிப்படையாகச் சொன்னால், முற்றிலும் நியாயமற்ற ஒரு கதை என்றும் அவர் சாடினார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 73 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஷெலென்ஸ்கி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

