Dec 10, 2025 - 10:13 PM -
0
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் இன்று (10) வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தொடர்ச்சியாக வடக்கு, மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் 2 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுமார் 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 200000 மக்கள் வடக்கில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்த வடக்கு மக்கள் மீன்பிடியை மட்டுமே நம்பியுள்ளனர்.
இவ்வாறிருக்கையில் அந்த ஒரே வாய்ப்பும் இந்திய மீனவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த மீனவப் பிரச்சினையை தீர்க்க இருநாடுகளின் மீனவர்களுக்கும் இடையில் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு இந்தியா வழங்கிய உதவியினை நன்றி கூறும் அதேவேளை தமிழக மீனவர்களின் தடை செய்யப்பட்ட மீன்பிடி செயற்பாடுகள் காரணமாக கடல் வளம் அழிக்கப்படுகின்றமை கவலை அளிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்வு ஒன்றை பெற்றுத் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழில் இணையம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
--

