Dec 13, 2025 - 10:50 AM -
0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர், இலங்கை ஏதேனும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உடனடியாகச் செயற்பட்டுத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது குறித்துத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தோஷ் ஜா, இலங்கைக்கு உதவி தேவைப்படும் இந்தத் தருணத்தில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் தலையிட்டுத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கைக்குத் தேவையான எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யாவும் கலந்துகொண்டார்.

