Dec 14, 2025 - 05:04 PM -
0
இந்தியாவின் அரியானாவில் இன்று காலை முதல் வீதிகள் தெரியாத அளவுக்கு அடைந்த மூடுபனி சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அங்கு ரோஹ்தக், ஹிசார்,ரேவாரி மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு வீதி விபத்துகளில் பலர் காயமடைந்தனர்.
ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சந்திப்பில் முதலில், ஒரு லொறி மற்றும் ஒரு கார் மோதிக்கொண்டன. தொடர்ந்து பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. சுமார் 35 முதல் 40 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் நொறுங்கின. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், ஹிசார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒரு லொறியுடன் மோதியதில், பின்னால் வந்த மற்றொரு பேருந்து, ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒரு இரு சக்கர ஓட்டி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற பயணிகள் காயமின்றி தப்பியதாகத் தெரிகிறது.
மேலும், ரேவாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை இல் மற்றொரு விபத்து ஏற்பட்டது. மூன்று முதல் நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதனால் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானாவில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடர்ந்த மூடுபனி உருவாகும் என்றும், வாகன சாரதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும், வாகனங்களுக்கு இடையேயான தூரத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

