Dec 14, 2025 - 11:50 PM -
0
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை மரைன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு சுமார் 25 இலட்சம் ரூபாய் எனவும், சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால், அண்மைக்காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள் மற்றும் மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (13) இரவு முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக தேவிபட்டினம் மரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் முள்ளிமுனை முகத்துவார கடற்கரை பகுதியில் பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இருவரைச் சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார், அப்பகுதியைச் சோதனையிட்டனர். இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டது.
தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு எடைபோடப்பட்டதில் 150 கிலோ கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இக்கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
--

