இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Dec 15, 2025 - 09:02 AM -

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவகாலத்தையொட்டி கடந்த மாதம் 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் திகதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. பருவகாலத்தையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தரிசனத்திற்கான ஒன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. 

உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு பருவகாலத்தையொட்டி மண்டல பூஜை வருகிற 27 ஆம் திகதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடக்கிறது. 

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. 

இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 59 ஆகும். 

இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். 

அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64 ஆயிரத்து 776 பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் வந்துள்ளனர். இந்த பாதை வழியாக தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள். 

தற்போது சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

கடந்த 8 ஆம் திகதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். அதே போல் கடந்த மாதம் 24ஆம் திகதி ஒரே நாளில் 1 லட்சத்து 867 பேர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05