Dec 18, 2025 - 10:28 PM -
0
மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையின் 02 மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு தீவுக்கூட்டத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ள கேலா (Kelaa) தீவுக்கு அருகிலேயே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட சுற்றிவளைப்பு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் இன்று (18) தகவல்களை வெளியிட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகளும் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலா தீவில் இருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் நேற்று முற்பகல் 8:30 மணியளவில் இந்தப் படகுகள் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது குறித்த மீன்பிடிப் படகுகள் மாலைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாலைத்தீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் இதற்கு முன்னரும் 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 6 இலங்கையர்கள் பயணித்த மீன்பிடிப் படகு ஒன்றும் பொறுப்பேற்கப்பட்டிருந்தது.
இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே அந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

