செய்திகள்
பதுளை - அம்பேவலை ரயில் போக்குவரத்து 20ஆம் திகதி முதல்

Dec 18, 2025 - 11:50 PM -

0

பதுளை - அம்பேவலை ரயில் போக்குவரத்து 20ஆம் திகதி முதல்

டித்வா புயலின் பாதிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் பாதையின் பதுளை மற்றும் அம்பேவலை இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இன்று (18) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். 

சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையில் பதுளை மாவட்டத்திற்குட்பட்ட 70 கிலோமீற்றர் பகுதி முழுமையாக தடைப்பட்டிருந்ததாகவும், அந்தப் பகுதி தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

"பதுளை மாவட்டத்தில் உள்ள மலையக ரயில் பாதையில் 70 கிலோமீற்றர் எமக்குச் சொந்தமானது. அது தற்போது திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 20 ஆம் திகதி காலை அம்பேவலையில் இருந்தும் பதுளையில் இருந்தும் இரு மார்க்கங்களிலும் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். 

இது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் மாதம். நுவரெலியா மற்றும் எல்ல பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலை எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த பாதை துரிதமாக சீரமைக்கப்பட்டது" என அவர் கூறினார். 

அதேபோல், இது தொடர்பில் இன்று காலை பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, அனர்த்த நிலைமை காரணமாக நாட்டின் வீதி மற்றும் ரயில் பாதைக் கட்டமைப்புகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

ரயில் பாதைகளில் 91 மண்சரிவுகள் மற்றும் பாறை புரள்வுகள், 38 பாலங்கள் (Culverts) சேதமடைந்தமை, 149 மரங்கள் வீழ்ந்தமை மற்றும் 177 ரயில் பாதை அடித்தளங்கள் சேதமடைந்தமை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். இது தவிர வெள்ளம் காரணமாக 27 ரயில் நிலையங்களும் சேதமடைந்துள்ளன. 

எவ்வாறாயினும், ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் திருகோணமலை ரயில் பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், தற்போது மஹவ வரையில் மாத்திரம் இடம்பெறும் ரயில் போக்குவரத்து காங்கேசன்துறை வரையிலும், புத்தளம் பாதையில் நாத்தாண்டிய வரையில் மாத்திரம் இடம்பெறும் போக்குவரத்து சிலாபம் வரையிலும் மற்றும் மட்டக்களப்பு ரயில் பாதைகளின் போக்குவரத்துகளும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை, மாத்தளை மற்றும் வத்தேகம இடையிலான பகுதி விரைவாக சீரமைக்கப்பட்டு, தற்போது வத்தேகம நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். தலைமன்னார் வரையிலான ரயில் போக்குவரத்து பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வீதி கட்டமைப்பில் A மற்றும் B தர வீதிகளில் 1,450 கிலோமீற்றர் தூரம் முழுமையாக அழிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் 723 கிலோமீற்றர் வீதிகள் மத்திய மாகாணத்திலேயே அழிவடைந்துள்ளன. அனைத்து வீதிகளையும் சீரமைக்க 69 பில்லியன் ரூபா நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இது தவிர 18 பிரதான பாலங்கள் உட்பட 40 பாலங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. அந்தப் பாலங்களை சீரமைக்க 6 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவாகும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05