Dec 19, 2025 - 05:58 PM -
0
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.
டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக ஈட்டுவதன் மூலம் டொலரின் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் ஊடாக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி குறித்துப் பின்வருமாறு விவரித்தார்.
முழுமையாக 6,282 வீடுகளுக்கு சேதம். 4,543 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம். எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் NBRO வினால் அனுமதி வழங்காத 6,877 வீடுகள் உட்பட மொத்தம் 17,648 வீடுகளுக்கு, மூன்று மாத காலத்திற்கு மாதமொன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை தணிந்த பின்னர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக 25,000 ரூபாய் வழங்கல்.
தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கல்.
முதற்கட்டமாக, முழுமையாக வீடுகளை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், NBRO பரிந்துரைகளைக் கொண்ட பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் அல்லது வீடுகள் சேதமடையாத போதிலும் அபாய நிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு ஜனவரி முதல் மூன்று மாத காலத்திற்கு 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.
வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்கள், பகுதியளவில் சேதமடைந்தவர்கள் அல்லது வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும் NBRO பரிந்துரையின் பேரில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கல்.
நெல், சோளம், நிலக்கடலை மற்றும் ஏனைய தானியங்களைப் பயிரிட்டுள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.
மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை உள்ளிட்ட செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
அடர்த்திக்கு ஏற்ப மிளகு, ஏலக்காய் மற்றும் கோப்பி ஆகிய பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் ( ஒரு மிளகு கொடிக்கு 250 ரூபாய்).
கால்நடை மருத்துவ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கலப்பினப் பசுவிற்காக தலா 200,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 பசுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
ஒரு நாட்டு பசுவிற்காக 50,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 பசுக்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும்.
பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு விலங்கிற்கு 20,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
உயிரிழந்த ஒரு முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 2,000 கோழிகளுக்கு உதவி வழங்கப்படும்.
இறைச்சிக் கோழி ஒன்றிற்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 4,000 கோழிகளுக்கு உட்பட்டு (அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை) நட்டஈடு வழங்கப்படும்.
கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, காப்புறுதி கொண்டுள்ள படகுகளுக்கு, அக்காப்புறுதித் தொகையை 'சீனோர்' நிறுவனத்திற்கு வழங்கி அத்தரப்பினருக்கு புதிய படகுகளைப் பெற்றுக்கொடுத்தல்.
வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இழந்த ஒவ்வொரு மீனவருக்கும் 100,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கல்.
அனர்த்தத்தினால் சேதமடைந்த படகுகளை 'சீனோர்' நிறுவனம் மூலம் இலவசமாகத் திருத்திக் கொடுத்தல்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தோணியை இழந்தவர்களுக்கு 100,000 ரூபா பணமும், பாதிப்படைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகளும் வழங்கல்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.
கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 9,600 கைத்தொழில் நிலையங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கல்.
பகுதியளவில் சேதமடைந்த வர்த்தகக் கட்டடங்களுக்கு 5 இலட்சம் ரூபா அல்லது மதிப்பீட்டின் பின்னர் அதிகபட்சமாக 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கல்.
பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேச வர்த்தக நிலையங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடுப்பனவு வழங்கல்.
சிறிய கைத்தொழில்களுக்கு 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும், பெரிய கைத்தொழில்களுக்கு 25 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கல்.

