செய்திகள்
தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப்

Dec 19, 2025 - 08:13 PM -

0

தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப்

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (19) சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார். 

இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. 

சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். 

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாச்சார கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்தும் தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். 

இச்சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயரஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்து கொண்டார். 

இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழும் பகுதிகள் பாரிய அளவில் மண் சரிவினால் பாதிக்கப்பட்டன. 

பேரிடரில் இருந்து இலங்கையை மீட்க இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின. 

காலம் உணர்ந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

நீண்ட நேர கலந்துரையாடலின் போது இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் மலையக மக்களின் வாழ்வு அவர்களின் எதிர்காலம் அதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளால் செயல்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05