Dec 20, 2025 - 11:23 AM -
0
நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பல வீதிகள் சேதமடைந்துள்ளதுடன், சில பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அந்தவகையில், அக்கரபத்தனை - மன்ராசி ஊட்டுவள்ளி பாலம் உடைந்து போயுள்ளமையால், அதனைப் பயன்படுத்தும் ஆறு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 3000 பேர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
ஊட்டுவள்ளி, வெங்கட்டன், கொடமல்லி, பச்சபங்களா, நல்லதண்ணி மற்றும் உருலேக்கர் உள்ளிட்ட ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் தமது அன்றாடத் தேவைகளுக்காக இந்தப் பாலத்தையே பயன்படுத்தி வந்தனர்.
எனினும், கடந்த 27 ஆம் திகதி ஆக்கர ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக இந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் பாடசாலை மாணவர்கள், நோயாளி்கள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக மன்ராசி, டயகம, அக்கரபத்தனை, தலவாக்கலை, லிந்துலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தச் சூழலில், உடனடியாகப் பாலம் அமைப்பது சாத்தியமாகாது என்பதால், தோட்ட மக்கள் ஒன்றிணைந்து தமது ஒரு நாள் வேலை நாட்களைத் தியாகம் செய்து, இரண்டு பாரிய மரங்களைத் தறித்து ஆற்றின் குறுக்கே போட்டுத் தற்காலிகப் பாலம் ஒன்றினை அமைத்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தற்காலிகப் பாலம் மழைக் காலங்களில் பயன்படுத்துவதற்கு மிகவும் ஆபத்தானது என்றும், நீண்ட காலம் இதனைப் பயன்படுத்த முடியாது என்றும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் இந்தப் பாலத்தைக் கடக்கும்போது விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், நிரந்தரப் பாலத்தை விரைவாக அமைத்துத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம் இல்லாத காரணத்தினால் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் செலவுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
50 ரூபாய் செலவாகும் இடத்திற்கு, முச்சக்கர வண்டிகளுக்கு 500 ரூபாய் வரை செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமக்கு இது மேலதிக சுமையாக அமைந்துள்ளதாகவும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது குறித்து உடனடி கவனம் செலுத்திப் பாலத்தைப் புனரமைத்துத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
--

