Dec 22, 2025 - 01:34 PM -
0
தித்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தனர். அவர்களில் பலரின் குடும்பங்களும் புயல் தாக்கத்தினால் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தன. நெருக்கடியான காலப்பகுதியிலும் அவர்களின் கடமையை தவறாமல் மேற்கொண்டிருந்ததை கௌரவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பொலிஸ் குடும்பங்களின் சிறுவர்களுக்கு ஆதரவளிக்கும் தேசிய செயற்பாட்டை Prime Group அறிமுகம் செய்திருந்தது. அதனூடாக, அவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கி, அவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடங்கலின்றி தொடர்வதற்கு ஆதரவளித்துள்ளது.
அத்தியாயவசிய பாடசாலை உபகரணங்களை தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு Prime Group விநியோகித்து, அவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளை நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் மீள ஆரம்பிப்பதற்கு உதவியிருந்தது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் முன்னெடுத்திருந்த இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த 1000 மாணவர்கள் பயன் பெற்றதுடன், சுமார் 10 மில்லியனை முதலீடாக மேற்கொண்டிருந்தது.
இந்த நன்கொடைகளை கையளிக்கும் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் குடும்ப நலன்புரி சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களும், பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Prime Group இன் சார்பாக அதன் தவிசாளர், இணை- தலைமை அதிகாரி, பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் திரு. அருண பிரசாத் லேகம்கே மற்றும் பேராசிரியர் கிரிஷாந்த பதிராஜவின் ஆலோசனையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Prime Group இன் இணை-தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “பொலிசாரின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதையிட்டு Prime Group பெருமை கொள்கிறது. எமது நாட்டுக்காக அவர்கள் ஆற்றும் தன்னலமற்ற சேவை பாராட்டுதலுக்குரியது. தித்வா புயல் தாக்கத்தின் போது தனிப்பட்ட இழப்புகள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த போதிலும், இலங்கை பொலிசார் தொடர்ந்தும் தேசத்திற்கு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் சமூகங்களை பாதுகாப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பிற்கு எமது நன்மதிப்புகள் உரித்தாகும்.” என்றார்.
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக Prime Group 30 வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில், மீட்சியாக சமூகங்களை கட்டியெழுப்புவதற்கும், வியாபாரத்துக்கு அப்பால் தேசத்திற்கு ஆதரவளிப்பதிலும் தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது. குடும்பங்களுக்கு நீண்ட காலம் நிலைத்திருக்கும் பெறுமதியை ஏற்படுத்துவது மற்றும் அவசியமான தருணங்களில் தேசத்துக்கு சேவையாற்றியவர்களுடன் என்றும் இணைந்திருப்பது எனும் நீண்ட கால நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை Prime Group முன்னெடுத்திருந்தது.

