Dec 23, 2025 - 08:48 AM -
0
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கான கட்டணம் 2.5 மடங்காக உயர்த்தப்படுகிறது.
இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டி தொடரில் விளையாடும் சிரேஸ்ட வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள்.
அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
இதேபோல் உள்ளூர் டி20 போட்டிகளில் களம் காணும் சிரேஸ்ட வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு 25 ஆயிரம் ரூபாவும், மாற்று வீராங்கனைகளுக்கு 12,500 ரூபாவும் அளிக்கப்படுகிறது.
கனிஸ்ட வீராங்கனைளுக்கு ஒருநாள் போட்டிக்கு 25 ஆயிரம் ரூபாவும், டி20 போட்டிக்கு ரூ.12,500-ம் வழங்கப்பட உள்ளது.
வீரர்களுக்கு நிகரான ஊதியத்தை வீராங்கனைகளும் பெறும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

