Dec 23, 2025 - 01:05 PM -
0
தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை வழங்குகின்றோம்.
சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தொடர்ந்து, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) பாதிக்கப்பட்ட தோட்டங்களில் தங்களது அவசரகால மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக செயற்படுத்தின. தோட்ட நிர்வாகக் குழுக்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களைக் கண்டறிய நெருக்கமாகப் பணியாற்றின. உயிராபத்துக்களைக் குறைப்பதற்கும் உடனடி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தகைய அபாயகரமான இடங்களில் வசிக்கும் குடும்பங்கள் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனைய பொது நிலையங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
இதற்கு இணையாக, தோட்டச் செயல்பாடுகள் மற்றும் வாழ்வாதாரச் சூழலை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) மேற்கொண்டன. இதில் சிதைவுகளை அகற்றுதல், வீடுகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இயலுமான இடங்களில் அடிப்படை போக்குவரத்துப் பாதைகளை மீண்டும் சீரமைத்தல் ஆகிய பணிகள் உள்ளடங்கியிருந்தன. தரைமட்டத்தில் சுகாதார நிலைகளைக் கண்காணிப்பதற்காக தோட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நலன்புரி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதோடு, சூறாவளியைத் தொடர்ந்த உடனடி காலப்பகுதியில் தொழிலாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் தோட்ட மட்டத்திலான தகவல் தொடர்பு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.
தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அண்டை சமூகத்தினருக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன. சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே நோயுற்ற நிலையில் இருப்பவர்கள் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுவினர் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. தோட்ட வசதிகள் பாதிக்கப்பட்ட இடங்களில், நீண்டகால சீரமைப்புத் திட்டங்கள் வகுக்கப்படும் அதேவேளை, அடிப்படைச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காணும் பணிகள், தோட்ட நிர்வாகம், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. அன்றாட சமூகத் தேவைகளை ஆதரிக்கவும், நிவாரணப் பகிர்ந்தளிப்புக்கு உதவவும், அத்துடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கான வீதித் தொடர்புகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளுக்கு வழிகாட்டவும் பிரதேச செயலகங்கள் தோட்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணி வருகின்றன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் சீராகவும் வினைத்திறனாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதற்காக, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
முழுமையான மதிப்பீடுகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT) மற்றும் ஏனைய அரச அதிகார சபைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மதிப்பீடுகள் உடனடி மீட்சித் தலையீடுகள் மற்றும் நீண்டகால புனர்வாழ்வுத் திட்டமிடல் ஆகிய இரண்டையும் கண்டறிய உதவும். இக்கட்டத்தில், சேதங்களின் முழு அளவு மற்றும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தோட்டங்கள் குறித்த விரிவான மதிப்பீடுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தோட்ட மருத்துவக் குழுக்கள், நீரினால் பரவக்கூடிய நோய்கள் உட்பட அனர்த்தத்திற்குப் பிந்தைய சாத்தியமான சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருப்பதோடு, தேவையான இடங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதுடன், தற்போது பெரும்பாலான தோட்டங்களை சென்றடையக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் மின்சாரம், நீர் விநியோகம் அல்லது தொடர்பாடல் வசதிகளில் தற்காலிகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், நிலவும் காலநிலை நிலைமைகளுக்கு உட்பட்டு, அவ்வசதிகள் தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகின்றன.
நாடு மற்றொரு மழையுடன் கூடிய காலநிலையை சந்திக்கவுள்ள நிலையில், பெருந்தோட்டத் துறை தனது தயார் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பிரதேச செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளையின் (PHDT) வழிகாட்டல்களுடன், பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) அபாயகரமான இடங்களை மீளாய்வு செய்தல், முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் வெளியேற்றும் நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் வசிக்கும் சமூகங்கள் தேவையேற்படின் இடமாற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்புக் காரணிகள் அவசியப்படும் இடங்களில், தற்காலிக மூடல் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட கடந்த கால நெருக்கடிகளை எதிர்கொண்ட போது பெருந்தோட்டத் துறை வெளிப்படுத்திய நெகிழ்ச்சித்தன்மையை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அங்கீகரிக்கின்றது. அத்துடன், தற்போதைய சூழ்நிலையை பொறுப்புணர்வுடன் கையாள்வதற்கு பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs), தொழிலாளர்கள் மற்றும் பங்காளர் நிறுவனங்கள் கொண்டுள்ள கூட்டுத் திறன் மீது சம்மேளனம் நம்பிக்கை கொண்டுள்ளது. தோட்டச் சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், மீட்சிப் பணிகள் தொடரும் வேளையில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் சங்கம் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

