Dec 23, 2025 - 02:58 PM -
0
ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் லைஃப் மற்றும் ஜெனரல் ஆகிய நிறுவனங்கள் தேசிய அனர்த்த மீட்பு நிலையத்துடன் இணைந்து ‘தித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்களுக்கு அத்தியாவசியமான உதவிகளை வழங்கியது. இந்த நிவாரண உதவித் திட்டம் 2025 நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 2 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டதுடன், அவசரநேரங்களில் சமூகங்களை ஆதரிக்கும் நிறுவனத்தின் உறுதியான நம்பிக்கை மீதான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்தது.
மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை உதவிகள் சரியான முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் மஹரகம நகர சபை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றின் ஊடாக உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த இரண்டு நிவாரணத் திட்டங்களிலும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் லைஃப் மற்றும் ஜெனரல் ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவக் குழுவினரும் பங்கேற்றிருந்தனர். நிறுவனம் சேவையாற்றும் சமூகங்களுடன் நெருக்கமானப் பேணிவரும் பிணைப்பை இது மேலும் வலுப்படுத்தியது.
இந்த நிவாரண உதவித்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் தலைவர் திரு.நுசித் குமாரதுங்க குறிப்பிடுகையில், “ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் சமூகங்களின் நலன்களையே எப்பொழுதும் தனது மையமாகக் கொண்டுள்ளது. இவ்வாறான கடினமான காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நிற்பதும், அவர்களுக்குத் தேவையான அர்த்தமுள்ள ஆதரவுகளை வழங்குவதும் எமது பொறுப்பாகும். இந்த நிவாரண உதவித் திட்டமானது சமூகங்களை உயர்த்துவதற்கான எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, பாதுகாப்பு மற்றும் பரிவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தேசிய காப்புறுதிதாரர் என்ற எமது வகிபாகத்தைப் பிரதிபலிக்கின்றது” என்றார்.
இந்த நிவாரண உதவிக்கு அப்பால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் கிளை அலுவலகங்களில் இடையறாத சேவையை வழங்கும் நோக்கில் அவற்றின் சேவை நேரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட எமது காப்புறுதிதாரர்களுக்கு உரிய உதவிகளையும், சேவைகளையும் வழங்கும் நோக்கில் உரிமைக் கோரல்கள், வாடிக்கையாளர் சேவை அணியினர் மற்றும் கிளை அலுவலகங்களின் பணியாளர்கள் சாதாரண வேலை மணித்தியாலங்களுக்கும் அப்பால் சேவையாற்றுகின்றனர்.
பாதுகாப்பு, நிலைத் தன்மை மற்றும் சேவையின் சிறப்பு என்பவற்றின் மீது நிறுவனம் கொண்டுள்ள நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களை பாதுகாப்பதும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஆதரவாக இருப்பதும் என்ற தனது அர்ப்பணிப்பில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளது.

