Dec 23, 2025 - 04:07 PM -
0
நிட்டம்புவ, வத்துபிட்டிவல ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் துறையில் முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து உயர்மட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் TransDigm Inc. நிறுவனத்தின் நிர்வாகக் குழு உதவித் தலைவர் திரு. Kevin McHenry மற்றும் Shield Restraint Systems நிறுவனத்தின் தலைவர் திரு. Dennis Pursel உள்ளிட்ட Shield நிறுவனத்தின் மூத்த நிர்வாககிகள் இதில் பங்கேற்றனர். அவர்களது வருகை, உற்பத்தி நடவடிக்கைகளை விரிவாக்குவதிலும், சர்வதேச கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் நிறுவனம் கொண்டுள்ள உறுதியான நோக்கத்தை எடுத்துக்காட்டியது. அதுமாத்திரமின்றி, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், பணிப்பாளர் நாயகம் ரேனுகா வீரகோன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க வர்த்தகத் துறை மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்று, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான பொருளாதார உறவை வெளிப்படுத்தினர்.
TransDigm Group Inc. நிறுவனத்தின் துணை நிறுவனமான Shield Restraint Systems, விமானப் போக்குவரத்து அல்லாத துறைகளுக்கான தரைவழி பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது. 8.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய விமானம் மற்றும் பாதுகாப்புத் துறையின் முன்னோடியான TransDigm Group, தனது துணை நிறுவனமான AmSafe Bridport (Pvt) Ltd மூலம் வத்துபிட்டிவல ஏற்றுமதி செயல்பாட்டு வலயத்தில் இயங்கி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
Shield Restraint Systems (Pvt) Ltd நிறுவனம், குழுமத்தின் இலங்கையில் மேற்கொள்ளும் புதிய மூலோபாய முதலீடாகும். இந்நிறுவனம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகள், வணிக வாகனங்கள், கட்டுமானம் மற்றும் விவசாய உபகரணங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களின் சவாரி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவின் Elkhart மற்றும் சீனாவின் Shield ஆகிய இடங்களில் ளூநைடன நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இலங்கையில் புதிதாக நிறுவப்படும் இந்த தொழிற்சாலை, தெற்காசியாவில் Shield நிறுவனம் மேற்கொள்ளும் மூலோபாய விரிவாக்கத்தின் முக்கிய படியாக அமைகிறது.
8.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம், 100,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன உற்பத்தி வசதிகளுடன் கூடிய தொழிற்சாலையை கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு முக்கிய மையமாக செயல்படும். இன்று 10 சதவீத உற்பத்தி திறனுடன் ஆரம்பிக்கப்படும் இந்த தொழிற்சாலை, முழு அளவிலான செயல்பாட்டின்போது 500 வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் இலங்கைக்கு கணிசமான பொருளாதார நன்மைகளை அளிக்கும். குறிப்பாக கணிசமான அளவு வரி வருவாய் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். குறிப்பாக, இத்திட்டம் உடனடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான நீண்டகால அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்குகிறது.
தற்போதைய உலகளாவிய அரசியல் சூழல் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. AmSafe Bridport (Pvt) Ltd நிறுவனத்தின் வெற்றிகரமான செயல்பாடுகள், இலங்கையின் உற்பத்தி திறன் மற்றும் வணிகச் சூழல் குறித்து Shield நிறுவனத்திற்கு தெளிவான புரிதலை வழங்கியது. மேலும், சிறந்த கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள், எளிதில் அணுகக்கூடிய விநியோகச் சங்கிலி வலையமைப்பு, கடினமான சூழ்நிலைகளிலும் தரத்தை பேணும் உற்பத்தி நெகிழ்ச்சித்தன்மை மற்றும் திறமையான தொழிலாளர் படை ஆகியவை, Shield நிறுவனம் இலங்கையை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.
இலங்கைக்கு இந்த முதலீட்டை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய AmSafe Sri Lanka-வின் பொது முகாமையாளர் சாந்தனி ஏகநாயக்க கூறுகையில், “இத்திட்டம் பல ஆண்டுகளாக இலங்கையை இலாபகரமான முதலீட்டு மையமாக எங்கள் வணிக உரிமையாளர்களுக்கு நிலைநிறுத்திய முயற்சியின் பலனாகும். இலங்கையில Shield நிறுவனத்தை நிறுவும் இந்தப் பயணத்தின் மூலம் நாங்கள் உணர்ந்தது என்னவெனில், நிர்வாக நடைமுறைகளின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட ஊக்குவிக்கும் உண்மையான ஒருங்கிணைந்த சேவையை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.
அத்துடன், “பரந்த சிந்தனை அணுகுமுறையைக் கொண்ட, முழுமையான பார்வையுடன் செயல்படும், நடைமுறை சார்ந்த தீர்வுகளை வரவேற்கும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறான ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே, சர்வதேச முதலீட்டிற்கான உண்மையான போட்டித்தன்மையும், கவர்ச்சியும் கொண்ட இடமாக இலங்கை தனது முழு ஆற்றலையும் அடைய முடியும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த தொழிற்சாலையை நிறுவுவது இலங்கையில் எங்களது முதலீட்டு பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. தற்போது நாங்கள் 17 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டு மதிப்பைக் கொண்ட எதிர்கால திட்டங்களை ஆராய்ந்து வருகிறோம். உள்ளூர் சமூகங்களுக்கு பயனுள்ள வாய்ப்புகளை உருவாக்கி, சர்வதேச முதலீட்டிற்கான மையமாக இலங்கையின் இடத்தை வலுப்படுத்தும் நிலைபேறான, நீண்டகால கூட்டாண்மைகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்;கு பங்களிப்பதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.

