Dec 23, 2025 - 05:25 PM -
0
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதார சேவை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பாரியளவிலான கருத்திட்டங்களை மீண்டும் மூலோபாயப்படுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் குழுவின் பரிந்துரைக்கு அமைய, பல சுகாதாரத் துறை கட்டுமானத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது நாட்டில் நிலவும் சுகாதார சேவைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிகரித்து வரும் சுகாதார சேவைகளுக்கான கேள்வியைக் கருத்திற் கொண்டு, பல்வேறு கட்டங்களில் உள்ள இந்தத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு, தற்போது வேலைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ள 08 சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான திட்டங்களின் மொத்த செலவு மதிப்பீடு மற்றும் கால அட்டவணையைத் திருத்தம் செய்யவும், அவற்றின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

