Dec 23, 2025 - 06:50 PM -
0
2025 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளை (24) கொழும்பு நகருக்கு, குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு அதிகளவான மக்களும் வாகனங்களும் வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
இதன்போது ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு நகரின் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நாளை தினத்தில் இந்தப் பொலிஸ் பிரிவுகளில் வழமை போன்று போக்குவரத்து நடைபெறும் எனவும், அதிக வாகன நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவசியத்துக்கேற்ப பின்வரும் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனப் போக்குவரத்து மாற்றங்கள்:
காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல்: என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம், காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி (MOD சந்தி) பாலதக்ஷ மாவத்தை, 'அலியா நான' சுற்றுவட்டம், மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாகக் கொள்ளுப்பிட்டி நோக்கிப் பயணித்தல்.
காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பால் செல்ல முடியும்.
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை ஊடாக 'அலியா நான' சுற்றுவட்டம் நோக்கியோ அல்லது 'அலியா நான' சுற்றுவட்டத்திலிருந்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதிக்கோ பயணிக்க முடியாது.
பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி 'அலியா நான' சுற்றுவட்டம் ஊடாக கொழும்பிலிருந்து வெளியேற முடியும். அதேபோல் காலி வீதிக்குத் கிளை வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி என்.எஸ்.ஏ. (NSA) சுற்றுவட்டம் நோக்கிப் பயணிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனத் தரிப்பிட வசதிகள்
கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காகக் கட்டணமில்லாத மற்றும் கட்டணம் அறவிடப்படும் வாகனத் தரிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலவச வாகனத் தரிப்பிடங்கள் (கட்டணமற்றவை):
கோட்டை: பாலதக்ஷ மாவத்தை MOD வாகனத் தரிப்பிடம் (பேர வாவி நோக்கி).
கொள்ளுப்பிட்டி / பம்பலப்பிட்டி / வெள்ளவத்தை: கடற்கரையோர வீதிகள் (Marine Drive).
கோட்டை & மருதானை: டி.ஆர். விஜேவர்தன மாவத்தை.
கொம்பனித்தெரு: பார்சன்ட் வீதி (வெளியேறும் ஒழுங்கை மட்டும்).
காலி வீதி: வெள்ளவத்தை 'சவோய்' (Savoy) அருகிலிருந்து காலி வீதி - பகத்தலே வீதி சந்தி வரையுள்ள வாகனத் தரிப்பிடப் பகுதிகளில் மட்டும்.
கறுவாத்தோட்டம்: ஆனந்த குமாரசுவாமி மாவத்தை - தாமரைத் தடாகம் சுற்றுவட்டத்திலிருந்து நூலகச் சுற்றுவட்டம் நோக்கி நுழையும் ஒழுங்கை (இடதுபுறம்).
கறுவாத்தோட்டம்: எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை.
கறுவாத்தோட்டம்: ரீட் மாவத்தை - ரீட் உத்தியோகபூர்வ சந்தியிலிருந்து ரீட் தர்ஸ்டன் சந்தி வரையுள்ள வீதியின் வலதுபுறம்.
கறுவாத்தோட்டம்: சுதந்திர மாவத்தை - சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையுள்ள வீதியின் வலதுபுறம்.
கறுவாத்தோட்டம்: மெட்லண்ட் பிளேஸ் .
கறுவாத்தோட்டம்: இலங்கை மன்றக் கல்லூரி வீதி.
கட்டணம் அறவிடப்படும் வாகனத் தரிப்பிடங்கள்:
புறக்கோட்டை: பெஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வாகனத் தரிப்பிடம்.
கோட்டை: விமலதர்ம சூரிய மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில்.
கோட்டை: ராசிக் பரீட் மாவத்தை ஹேமாஸ் வாகனத் தரிப்பிடம்.
டி.ஆர். விஜேவர்தன மாவத்தை: லேக் ஹவுஸ் வாகனத் தரிப்பிடம்.
கோட்டை: லேடன் பெஸ்டியன் வீதி.
கோட்டை: பிரிஸ்டல் வீதி.
கோட்டை: டியூக் வீதி.
கொம்பனித்தெரு: யூனியன் பிளேஸ் - டோசன் வீதி சந்தி எக்சஸ் டவர் வாகனத் தரிப்பிடம்.
மருதானை: காமினி சுற்றுவட்டம் (St. Clement).

