Dec 23, 2025 - 07:11 PM -
0
'டித்வா' புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா நிதியை, முதற்கட்டமாக 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டில், அரசாங்கத்தினால் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் நிதியுதவியாக, ஒரு அலகிற்கு 2 இலட்சம் ரூபா வீதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
'டித்வா' புயலால் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த வணிகங்களை அடையாளம் காண்பதற்காக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரவு அமைப்பின் ஊடாக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட சுமார் 10,000 கைத்தொழிலாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில், பிரதேச செயலக மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 531 கைத்தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக 106.2 மில்லியன் ரூபா நிதி, கம்பஹா, கொழும்பு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது:
நாட்டின் கைத்தொழில் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதிசெய்து, பாதிக்கப்பட்ட கைத்தொழிலாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகப் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய பலமானதொரு கைத்தொழில் துறையைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை உணர்ந்து, அதற்கான பொறிமுறையும் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

