Dec 23, 2025 - 10:25 PM -
0
எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் 2026 புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு தேவைகளுக்காக மக்கள் அதிகளவில் கூடும் பிரதான நகரங்களுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களுக்கு இடையூறின்றி தமது கடமைகளைச் செய்வதற்காகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், மதத் தலைவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து அனைத்து பக்தர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நகரங்களைச் சுற்றி புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கடமையில் ஈடுபடுத்தி, புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் ஹோட்டல்கள், வர்த்தகத் தொகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள், குழுக்கள், வாகனங்கள் மற்றும் தமது சொத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக முன்னெடுக்கப்படும் இந்தக் கடமைகளுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை பொலிஸார் தொடர்ந்து எதிர்பார்க்கின்றனர்.

