Dec 24, 2025 - 08:03 AM -
0
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் எடை 6 கிலோ 201 கிராம் எனச் சுங்கப் பணிப்பாளரும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
விசேட பொதி சோதனையின் போதே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஒருகொடவத்தை சுங்க வளாகத்தில் சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
சுங்கத் தடுப்புப் பிரிவின் செயற்பாட்டுப் பிரிவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
அந்தக் கொள்கலன் முழுவதும் மஞ்சள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீட்கப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

