Dec 24, 2025 - 01:22 PM -
0
பெங்களூருவில் விவாகரத்து கோரிய மனைவி மீது கணவன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தனியார் வங்கி ஒன்றின் பிரதி முகாமையாளருமான மகேஸ்வரி (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஸ்வரி தம்பதியினர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனமொன்றிலும், மகேஸ்வரி தனியார் வங்கியொன்றில் பிரதி முகாமையாளராகவும் கடமையாற்றி வந்துள்ளனர்.
சமீபத்தில் பாலமுருகன் தனது வேலையை இராஜினாமா செய்த நிலையில், தம்பதியினரிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகனுடனான கருத்து வேறுபாடு காரணமாக, மகேஸ்வரி தனது பிள்ளைகளுடன் பெங்களூரு - ராஜாஜிநகர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளதுடன், கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், மனைவி தங்கியிருந்த இடத்தை இரகசியமாக கண்டறிந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மகேஸ்வரியை வழிமறித்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஸ்வரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சந்தேக நபரான பாலமுருகன் பொலிஸில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

