Dec 24, 2025 - 01:59 PM -
0
இந்தியாவில் நடைபெற்று வரும் 2025-26 ஆம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று (24) வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் பீகார் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பீகார் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ஓட்டங்களை குவித்தது.
இப்போட்டியில், பீகார் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மைதானத்தில் அதிரடி காட்டினர். குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி, அணித் தலைவர் எஸ். கனி மற்றும் ஆயுஷ் லோஹருகா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
மிகச் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 84 பந்துகளில் 190 ஓட்டங்களை விளாசினார். இவரது இன்னிங்ஸில் 16 நான்கு ஓட்டங்களும், 15 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.
இதேவேளை, 36 பந்துகளில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அணித்தலைவரான கனி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 128 ஓட்டங்களை குவித்தார்.
விக்கெட் காப்பாளர் ஆயுஷ், 56 பந்துகளில் 116 ஓட்டங்களை பெற்றார்.
பியூஷ் சிங் 66 பந்துகளில் 77 ஓட்டங்களை எடுத்தார்.
எதிரணி பந்துவீச்சாளர்களால் பீகார் அணியின் ஓட்ட வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை. டெச்சி நேரி (Techi Neri) வைபவ் மற்றும் மங்கள் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம், உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு இன்னிங்ஸில் அணி ஒன்று பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற உலக சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டு தமிழ் நாடு அணி, இதே அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 506 ஓட்டங்களைப் பெற்றதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பீகார் அணி இன்று முறியடித்துள்ளது.

