Dec 24, 2025 - 02:38 PM -
0
போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அம்பலாங்கொட நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காலை அம்பலாங்கொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த இனம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், முகாமையாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அம்பலாங்கொட, குருதுவத்தை - ஆந்தாதொல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் மீட்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் இருவரும் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை அந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் இவரே என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.
இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர தனது அலுவலகத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் வெலிகம பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

