Dec 24, 2025 - 02:38 PM -
0
மட்டக்களப்பு, பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிதியில், மூன்று பேருக்கு இதுவரை பணம் வைப்புச் செய்யப்படவில்லை எனவும், இந்த நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பிரதேச செயலாளர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தோனிச் சீல் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊழல்கள் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு நேற்று (23) இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்குக் காரணமாகவே முறையான நிவாரணம் கிடைக்கவில்லை.
பாலமீன்மடு கிராமத்தில் ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டினால் 25 பேருக்கு வீடு சுத்தம் செய்வதற்குத் தலா 25 ஆயிரம் ரூபா நிதியும், நிவாரணப் பொதியும் வழங்கப்பட்டிருந்தது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். இதனையடுத்து, ஜனாதிபதியின் செயலாளர் பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு, இது சம்பந்தமாக விசேட குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி செயலகம் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தினர்.
இருந்தபோதும், குறித்த அரசியல் கட்சியின் பரிந்துரையில் கடந்த 9 ஆம் திகதி 25 பேருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியில், 3 பேருக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை.
நாங்கள் வேண்டுமென்று எந்த அதிகாரிகளுக்கும் எதிராகக் குற்றம் சுமத்தவில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற ரீதியில், பாதிக்கப்பட்ட மக்கள் எங்களிடம் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை வெளிப்படுத்துகிறோம். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பிரதேச செயலாளர் 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்வதற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை, ஏற்கனவே 25 பேர் கொண்ட பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு 22 பேருக்குப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 நபர்களுக்கும் பணம் வைப்புச் செய்யப்படவில்லை. எனவே இந்த 3 பேரின் நிதி எங்கே? இந்த நிதிக்கு என்ன நடந்தது? இதில் ஊழல்கள் நடந்துள்ளதா? என்பது கண்டறியப்பட வேண்டும்.
வெள்ள காலத்தில் கள விஜயம் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்களிடம் 'புகைப்படம் எடுத்தீர்களா? வீடியோ எடுத்தீர்களா?' என்று கேட்பது என்ன நியாயம்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நீங்கள் கள விஜயம் மேற்கொள்வது உங்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
அனைத்துப் பிரதேசங்களிலும் நிவாரணம் மற்றும் நிதி வழங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை, அந்தந்த கிராம சேவையாளர் அலுவலக அறிவித்தல் பலகையில் பகிரங்கமாகக் காட்சிப்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன முறைகேடு நடந்துள்ளது அல்லது உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் உதவி கிடைத்ததா என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
--

