Dec 24, 2025 - 05:28 PM -
0
தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று (24) இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பில் இந்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன.
இதனையடுத்து வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மேயர் சுனில் கமகே, சபையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார்.
36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகரசபையில், மேயர் வெளியேறியதை அடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நகர செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மேயரின் ஆசனத்தில் அமர்ந்து மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த முயற்சித்தார்.
இதன்போது 17 பேர் எதிராக வாக்களித்ததுடன், 19 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
வாக்கெடுப்பு குறித்த இறுதித் தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகர சபைக்கு முன்னால் பதாதைகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதேவேளை, பேலியகொடை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது.
தவிசாளர் கபில கீர்த்தி ரத்ன தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், எதிராக 9 வாக்குகளும் ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்தன.
வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த போதிலும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயற்படப் போவதாக தவிசாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

