Dec 26, 2025 - 11:11 AM -
0
காலநிலை சீராகி வெள்ள அச்சுறுத்தல் நீங்கி நுவரெலியாவில் தற்போது சீராக காலநிலை நிலவி வருகிறது இதனால் அதிகமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் 'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா, நேற்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவில்லான சுற்றுலா பயணிகள் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வழங்கிய பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் அவதானிக்கப்பட்ட நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளம் மற்றும் வனப் பூங்காவிற்குச் செல்லும் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் பூங்கா உள் பகுதியில் நிலத்தில் வெடிப்புக்கள், நிலத்தாழிறக்கம், நிலத்தில் குழிகள் ஏற்படுதல், மரங்கள் செடிகொடிகள் சாய்தல் மற்றும் புதிய நீரூற்றுக்கள் உருவாகுதல் போன்றவை தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க எச்சரிக்கை பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு, பூங்கா ஊழியர்களால் விசேட உதவித் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்கெனவும் அதிக பாதுகாப்பு ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
--

