செய்திகள்
பண பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி- 7 இளைஞர்கள் கைது

Dec 26, 2025 - 12:48 PM -

0

பண பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி- 7 இளைஞர்கள் கைது

பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18, 19, 20, 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

 

இரவு வேளையில் பழைய காலி வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் நடத்தப்படுவதாகப் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், பாணந்துறை பழைய காலி வீதியின் ஜூபிலி சந்தி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 4 மோட்டார் சைக்கிள்களும் 7 இளைஞர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்கள் வெட்டப்பட்டு உருமாற்றப்பட்டிருந்ததாகவும், ஓட்டப் போட்டிகளின் போது அடையாளம் காண்பதற்காக அவை இலக்கமிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05