Dec 27, 2025 - 05:15 PM -
0
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தோற்கடிக்கப்படுவது திசைகாட்டியின் வரவு செலவுத் திட்டம் அல்ல, மக்களின் வரவு செலவுத் திட்டமே என அவர் மேலும் தெரிவித்தார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தோற்கடிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட பெருமளவிலான திட்ட முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டிருந்தன என்றும், இந்த உள்ளூராட்சி மன்றங்களினூடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகளைச் சிறந்த முறையில் வழங்குவதற்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக திசைகாட்டிக்கு வாக்களித்தவர்கள் மாத்திரமன்றி, அனைவருக்கும் சலுகைகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு உறுப்பினர்கள் வாக்களிப்பது, அவர்களை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக்குவதற்கு வாக்களித்த மக்களுக்கு எதிராகச் செயற்படுவதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் எந்த நோக்கத்திற்காக உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களைத் தோற்கடிக்கின்றனர் என்பது கேள்விக்குரியது என மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க,
முற்றாக வீழ்ந்து கிடந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இன்று திறைசேரியானது கடந்த ஒரு வருடத்தில் 1200 பில்லியன் ரூபாய் கையிருப்பை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருமானம் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 4.5% அளவில் பேண எம்மால் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டிற்கான மூலதனச் செலவினங்களுக்காக 1500 பில்லியன் ரூபாயை ஒதுக்கி, நாட்டில் கணிசமான அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்த வேளையிலேயே இந்தப் புயல் வந்தது. எவ்வாறாயினும், சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

