Dec 28, 2025 - 07:12 AM -
0
தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும்.
எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும்.
அதேவேளை தமிழ் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை சமஸ்டி முறையிலான தீர்வாகும்.
அதனை ஒருபோதும் இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காது.
புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்தி வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே மிஞ்சி இருக்கின்றது.
2025 புயல் ஏற்பட்டு தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலும் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்காலப் பகுதியில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள் இன்னும் மீண்டெழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பெரிதும் பாதித்திருக்கின்றன.
தற்போது இந்த புயல் காரணமாகவும் மக்களின் நிலை மேலும் மோசமாகியுள்ளது.
அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆகக் குறைந்த தீர்வாக 13வது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்கள் கூட பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது
மிக இலகுவாக பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது.
13வது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதே யதார்த்த கள அரசியல் ஆகும் என தெரிவித்துள்ளார்.
--

