Dec 28, 2025 - 12:48 PM -
0
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (27) நடைபெற்றது.
இந்த விழாவில் 80 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்றதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, அரசியல் பேசக்கூடாது, தவெக கொடியை யாரும் எடுத்து வரக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஒரு சில ரசிகர்கள் தவெக கொடியை கையில் எடுத்து வந்து காட்டியதால், மலேசிய பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் அங்கு தெரிவித்துள்ளதாவது,
என்னுடைய ரசிகர்கள் ஒருநாள், இரண்டு நாள் இல்லைங்க.. கிட்டத்தட்ட 33 வருஷங்களுக்கு மேல என்கூடவே நின்னு இருக்காங்க. அதனால், அடுத்த 30, 33 வருஷங்களுக்கு அவங்க கூட நான் நிற்க முடிவு பண்ணியிருக்கேன். எனக்கு ஒண்ணுனா ரசிகர்கள் தியேட்டரில் நிற்குறாங்க.
நாளை அவர்களுக்கு அவங்க வீட்டுல போய் நிற்க முடிவு பண்ணியிருக்கேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இந்த விஜய் சும்மா நன்றின்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டுதான் போவேன். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால், உங்களுக்கு எப்போதும் நண்பர்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், எதிராளி நிச்சயம் தேவை. ஒரு வலிமையான எதிராளி இருக்கும் போதுதான் நீங்களும் வலிமைமிக்கவராக ஆகிறீர்கள்.
விஜய் தனியா வருவாரா..? அணியா வருவாரா..? என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம்? 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போது கூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்சில்தான் 'கிக்' இருக்கும். ஆகவே, 2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது. மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

