வணிகம்
இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர் மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

Dec 29, 2025 - 06:46 PM -

0

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர் மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 

2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின் வருமானமான 374.94 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 1.96% சிறிய வீழ்ச்சியை ஆடைத் தொழிற்துறை பதிவு செய்துள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி செயல்திறன் பிரதான சந்தைகளில் கலவையான முடிவுகளைக் காட்டியுள்ளது: அமெரிக்கா: இதற்கான ஏற்றுமதி வருமானம் 152.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 143.98 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 5.79% அதிகரிப்பாகும். ஐரோப்பிய ஒன்றியம் – (பிரித்தானியா தவிர்ந்த): இதற்கான ஏற்றுமதி வருமானம் 119.61 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் 115.73 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 3.35% அதிகரிப்பாகும். பிரித்தானியா: இதற்கான ஏற்றுமதி வருமானம் 43.63 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 50.63 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 13.83% பாரிய வீழ்ச்சியாகும். ஏனைய சந்தைகள்: இதற்கான ஏற்றுமதி வருமானம் 52.04 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் 64.60 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 19.44% வீழ்ச்சியாகும். 

வலுவான ஒட்டுமொத்த செயல்திறன்: ஜனவரி-நவம்பர் 2025 

நவம்பர் மாதத்தில் நிலவிய மந்தகதிக்கு மத்தியிலும், 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான பதினொரு மாத காலப்பகுதியில் ஆடை ஏற்றுமதியானது ஒரு வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (US$ 4,336.84 மில்லியன்) ஒப்பிடுகையில், இம்முறை ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 5.42% அதிகரிப்பாகும். 

சந்தை ரீதியான ஆண்டுக்கான இதுவரையிலான செயல்திறன்: 

* ஐரோப்பிய ஒன்றியம் (பிரித்தானியா தவிர்ந்த): 1,435.39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (13.07% அதிகரிப்பு)

* ஏனைய சந்தைகள்: 742.98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (5.75% அதிகரிப்பு)

* அமெரிக்கா: 1,769.08 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (1.73% அதிகரிப்பு)

* பிரித்தானியா: 624.54 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (0.22% வீழ்ச்சி) 

2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாத காலப்பகுதிக்கான எமது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பதிவாகியுள்ள 5.42% வளர்ச்சி, சவால்கள் நிறைந்த உலகளாவிய சூழலிலும் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனைப் பிரதிபலிக்கிறது. நவம்பர் மாதத்தில் நாம் 1.96% என்ற சிறிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும், இந்த ஆண்டின் இதுவரையிலான எமது ஒட்டுமொத்த வலுவான செயல்திறனுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சாதாரணமான மாற்றமாகவே பார்க்கப்பட வேண்டும். 

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் நாம் அடைந்துள்ள 13.07% வளர்ச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய கொள்வனவாளர்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அவர்களின் பெருகிவரும் கடுமையான நிலைப்புத்தன்மை மற்றும் இணக்கப்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நாம் எடுத்த மூலோபாய ரீதியான முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், குறைந்த இலாப வரம்புகளுக்கு மத்தியிலும் அமெரிக்க சந்தையில் எமது தொடர்ச்சியான வளர்ச்சி, தரம், விநியோகம் மற்றும் அறநெறி சார்ந்த உற்பத்தித் தரங்களில் இலங்கை உற்பத்தியாளர்கள் இன்னும் போட்டித்தன்மையுடன் திகழ்வதைக் காட்டுகிறது. என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05