செய்திகள்
பயணிகளைச் சுரண்டும் முச்சக்கரவண்டி மாஃபியா

Dec 29, 2025 - 09:33 PM -

0

பயணிகளைச் சுரண்டும் முச்சக்கரவண்டி மாஃபியா

மொபைல் செயலிகள் ஊடாக இயங்கும் வாடகை வாகனச் சேவைச் சாரதிகள், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 

அண்மையில் எல்ல பிரதேசத்தில் சாரதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முச்சக்கர வண்டி, டுக்-டுக் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த வாகனம், பயணிகளுக்குத் தவிர்க்க முடியாத ஒரு பயணத் தோழனாக உள்ளது. 

குறைந்த செலவில் எங்கு வேண்டுமானாலும் இலகுவாகச் செல்ல முடிவதால் பலர் இச்சேவையைப் பயன்படுத்துவதோடு, இது பலருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. 

இருப்பினும், ஆரம்பத்தில் மக்களுடன் நட்பாக இருந்த முச்சக்கர வண்டிச் சேவை, காலப்போக்கில் பயணிகளைச் சுரண்டும் ஒரு 'மாஃபியாவாக மாறியதால் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

தன்னிச்சையாக அறவிடப்படும் அதிக கட்டணங்கள் மற்றும் ஏமாற்றும் மீற்றர்களே இதற்கு முக்கிய காரணங்களாகும். 

முச்சக்கர வண்டிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், PickMe மற்றும் Uber போன்ற செயலிகள் இலங்கையில் அறிமுகமாகின. 

இவை நியாயமான கட்டணம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான சேவையை வழங்கியதால் கொழும்பு, கண்டி போன்ற நகரங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

இதனால் பாதிக்கப்பட்ட சில முச்சக்கர வண்டிச் சாரதிகள், செயலி மூலமான வாகனங்களை வழிமறித்தல், அச்சுறுத்துதல் மற்றும் தாக்குதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வாறான சம்பவங்களால் இந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பலமுறை அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

செயலி மூலமான சேவைகளில் கட்டணம் குறைவாக இருப்பதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகச் சில சாரதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பயணிகள் தொடர்ந்தும் செயலிகளையே விரும்புகின்றனர். 

தம்மைச் சுரண்டும் மாஃபியாக்களிடம் சிக்க விரும்பவில்லை எனவும், நிறுவனப்படுத்தப்பட்ட சேவைகளையே தாம் நாடுவதாகவும் பயணிகள் கூறுகின்றனர். 

நியாயமான கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்கும் சேவைகளை நோக்கி மக்கள் ஈர்க்கப்படும் போது, ஏனைய சாரதிகள் செய்ய வேண்டியது தாக்குதல்களை நடத்துவதா? அல்லது அதேபோன்ற தரமான சேவையை வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெறுவதா? எனப் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05