Dec 30, 2025 - 10:23 PM -
0
மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான சொத்துக்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள சிலர், தமது சுயலாபத்திற்காக மதவாதச் செயற்பாடுகளைத் தூண்டிவிட்டு மாநகர சபையைச் சிக்கலுக்குள்ளாக்க முயற்சிப்பதாக மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்று (30) மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதில் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார், மாநகர சபை உறுப்பினர் து.மதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில், ஆணையாளர்களைப் பயன்படுத்தி சிலர் நீண்டகால குத்தகை அடிப்படையில் வர்த்தக நிலையங்களைப் பெற்றுள்ளனர். இது தொடர்பில் தற்போதுள்ள மக்கள் சபை சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கச் சிலர் மதவாதத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, தனியார் பேருந்து நிலையத்தின் மேல் தளத்தை நீண்டகால குத்தகைக்கு எடுத்துள்ள ஒருவர், சில இளைஞர்களைத் தூண்டிவிட்டு ஊடகங்கள் வாயிலாக மாநகர சபைக்கு எதிராகத் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அதனால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பொது இடங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இதனை ஒரு ஜிம் (Gym) சென்டர் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தமையுடன் தொடர்புபடுத்தி, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் சிலர் சித்தரித்து வருகின்றனர்.
தனிப்பட்ட இடங்களை தமது சொந்த நிகழ்வுகளுக்குப் பயன்படுத்த எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்திய முதல்வர், திட்டமிட்ட அடிப்படையில் மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊழல் மற்றும் முறையற்ற குத்தகை முறைகளுக்கு எதிராக மாநகர சபை எடுக்கும் உறுதியான நடவடிக்கைகளைத் திசைதிருப்பவே இத்தகைய மதவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
--

