Dec 31, 2025 - 08:23 AM -
0
கொழும்பு நகரை அண்மித்து இன்று (31) விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, வெளி மாகாணங்களிலிருந்து பெருந்திரளான மக்களும் வாகனங்களும் இன்று கொழும்பு நகருக்கு, விசேடமாக காலி முகத்திடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனவே, அவ்வாறு வரும்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் இலங்கை பொலிஸாரால் இவ்வாறானதொரு விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் பாதுகாப்புத் திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விசேடமாக கொழும்பு நகரின் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்ப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் இந்தப் பொலிஸ் பிரிவுகளில் வழமை போன்று வாகனப் போக்குவரத்து இடம்பெறும் எனவும், அதிக வாகன நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம், சந்தர்ப்பத்திற்கேற்ப பின்வருமாறு வாகனப் போக்குவரத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காலி மத்திய வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல்: என்.எஸ்.ஏ. (NSA) சுற்றுவட்டம், காலி மத்திய வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (MOD சந்தி), பாலதக்ஷ மாவத்தை, அலியா நான சுற்றுவட்டம், மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிப் பயணித்தல்.
காலி மத்திய வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரையும் அங்கிருந்து முன்னோக்கியும் செல்லுதல்.
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை ஊடாக அலியா நான சுற்றுவட்டம் நோக்கியோ அல்லது அலியா நான சுற்றுவட்டத்திலிருந்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி மத்திய வீதிக்கோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலதக்ஷ மாவத்தையின் குறுக்கு வீதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் வலதுபுறமாகத் திருப்பி அலியா நான சுற்றுவட்டம் ஊடாக கொழும்பிலிருந்து வெளியேற முடியும் என்பதுடன், காலி மத்திய வீதிக்குக் குறுக்கு வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களையும் வலதுபுறமாகத் திருப்பி என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் நோக்கிப் பயணிக்கச் செய்தல்.
மேற்சொன்ன போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது கொழும்பு நகரின் நடைபாதைகள் மீதும் பிரதான வீதிகளை மறிக்கும் வகையிலும் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், அவ்வாறான வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கடமையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காகப் பின்வரும் வாகனத் தரிப்பிடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அந்த வாகனத் தரிப்பிடங்களில் சுமார் 5,900 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பின்வரும் இலவச வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளின் இருபுறங்களிலும் கட்டணம் அறவிடப்படாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவின் பாலதக்ஷ மாவத்தை M.O.D வாகனத் தரிப்பிடம் (பேரே வாவிக்கு அருகில்/நோக்கி)
கொள்ளுப்பிட்டி / பம்பலப்பிட்டி / வெள்ளவத்தை கரையோர வீதிகள்
கோட்டை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் பாசன்ஸ் வீதி வெளியேறும் ஒழுங்கை மட்டும்
காலி வீதி வெள்ளவத்தை சவோய் அருகில் இருந்து காலி வீதி பகத்தலே வீதி சந்தி வரையிலான வாகனத் தரிப்பிடங்களில் மட்டும்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரைத் தடாக சுற்றுவட்டத்திலிருந்து நூலக சுற்றுவட்டம் நோக்கி உள்நுழையும் ஒழுங்கை (இடதுபுறம்)
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் எப். ஆர். சேனாநாயக்க மாவத்தை
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ரீட் மாவத்தை , ரீட் ராஜகாரிய சந்தியிலிருந்து ரீட் தர்ஸ்டன் சந்தி வரையிலான வீதியின் வலதுபுறம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் சுதந்திர மாவத்தை, சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையிலான வீதியின் வலதுபுறம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் மெட்லண்ட் பிரதேசம்
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் இலங்கை மன்றக் கல்லூரி வீதி
பின்வரும் வாகனத் தரிப்பிடங்களில் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பொலிஸ் பிரிவின் பஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வாகனத் தரிப்பிடம்
கோட்டை பொலிஸ் பிரிவின் விமலதர்மசூரிய மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடம்
கோட்டை பொலிஸ் பிரிவின் ராசிக் பரீத் மாவத்தை ஹேமாஸ் வாகனத் தரிப்பிடம்
டி. ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் வாகனத் தரிப்பிடம்
கோட்டை பொலிஸ் பிரிவின் லேடன் பஸ்டியன் வீதி
கோட்டை பொலிஸ் பிரிவின் பிரிஸ்டல் வீதி
கோட்டை பொலிஸ் பிரிவின் டியூக் வீதி
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸ், டோசன் வீதி சந்தி, எக்சஸ் டவர் வாகனத் தரிப்பிடம்
மருதானை பொலிஸ் பிரிவின் காமினி சுற்றுவட்டம் - சென் கிளெமென்ட் வாகனத் தரிப்பிடம்
இந்தத் திட்டத்திற்கு அமைய வாகனப் போக்குவரத்து தொடர்பான வரைபடங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

