Dec 31, 2025 - 09:50 AM -
0
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர், "ராஜவத்த சதுவா" என அழைக்கப்படும் நாராயணகே திலீப் சதுரங்க எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டுத் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் ஆவார்.
சிறையில் இருந்தபோது கடந்த 29 ஆம் திகதி சிறைக்கைதிகள் சிலரால் தாக்கப்பட்டமையினால் இவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு மத்தியில், களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் காலில் விலங்கிடப்பட்டுத் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இன்று காலை 6.15 மணியளவில் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் ரிவோல்வர் ரகத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, வைத்தியசாலை மதிலின் மேலாகக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளுக்காக களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

