Dec 31, 2025 - 10:06 AM -
0
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மக்கள் சபை இல்லாத காலத்தில் ஆணையாளர்களைக்கொண்டு சிலர் வர்த்தக நிலையங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் நடவடிக்கைகளை தற்போதுள்ள மாநகரசபையின் மக்கள் சபை முன்னெடுத்துள்ள நிலையில் கடைகளை நீண்டகால குத்தகைக்கு பெற்றுள்ள சிலர் மாநகரசபைக்கு எதிராக மதவாத செயற்பாடுகளை தூண்டுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபை தனியார் பஸ் நிலையத்தின் மேல் தளத்தினை நீண்டகால குத்தகைக்கு பெற்றுள்ள ஒருவர் சில இளைஞர்களை வைத்து மாநகரசபைக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
நேற்று (30) மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார், மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில முக்கிய இடங்களில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில் தமது சொந்த நிகழ்வுகளை தமது இடங்களில் நடாத்துவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லையெனவும் திட்டமிட்ட வகையில் மத நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளை முன்னெடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
ஒரு ஜிம் சென்றர் வேறு நபர்களிடம் பணம் அறவிட்டு தனியார் பஸ் நிலையத்தில் நடாத்தவிருந்த இசை நிகழ்வினை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினையும் அதன்போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கமுடியாது என தெரிவித்ததை வேறுவிதமாக சித்தரித்துவருவதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
--

