Jan 1, 2026 - 12:25 PM -
0
தமிழகத்தின் திருத்தணி ரயில் நிலையத்திற்கு அருகில், கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி, அதனை 'ரீல்ஸ்' காணொளியாகப் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு, இளைஞர்களின் இத்தகைய வன்முறைப் போக்கிற்குத் தற்போதைய சினிமாவும் ஒரு முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"திருத்தணி சம்பவத்திற்குத் தற்போதைய சினிமாவும் ஒரு காரணமாகும். தற்பொழுது வெளிவரும் சில திரைப்படங்களில் வன்முறை... வன்முறை... வன்முறை... என்ற நிலையே மேலோங்கியுள்ளது.
சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவிலான சமூகப் பொறுப்புணர்வு திரைப்பட இயக்குநர்களுக்கும், அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி நடிகர்களுக்கும் இருக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

