Jan 1, 2026 - 05:15 PM -
0
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றதுடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் கடமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பிரதேச செயலாளர் இங்கு உரையாற்றுகையில் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிடல் மயமாக்கல், க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கியதாக சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ. மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
--

