Jan 1, 2026 - 05:17 PM -
0
பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இன்று (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதால், பத்தாவது பாராளுமன்றத்திற்கு விசேடமான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வலியுறுத்தினார்.
இதற்கு அமைய, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து பாராளுமன்றப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இது விடயத்தில் சாதகமான முன்னேற்றங்களைக் காண முடிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக மேம்பாடு ஏற்படும்போது நியாயம் மற்றும் சமத்துவம் பாராளுமன்றத்தில் உள்ள சகல பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தனது உரையில் தெரிவித்தார்.
பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளடங்கலான சகல உழைக்கும் மக்களினதும் உரிமைகளை அதியுச்ச அளவில் பாதுகாப்பதற்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தான் தொடர்ந்தும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கும் ஊழியர்களாக மாறுவதற்கு புத்தாண்டில் தைரியம் கிடைக்க வேண்டும் எனக் கூறி சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடு என்ற ரீதியில் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிச் செல்லும்போது சட்டவாக்கம் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு விசாலமானது எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடவடிக்கைகள் மற்றும் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கானவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றியைத் தெரிவித்த அவர், புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.

